புதுடில்லி: கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலைக்குச் செல்லும் எனவும் இந்தியா மற்றும் சீனாவைத் தவிர வளரும் நாடுகளுக்கு, இது கடுமையான சிக்கலைக் கொடுக்கும் எனவும் ஐ.நா.வின் சமீபத்திய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இவ்வறிக்கையால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 31) ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் 200 நாடுகளை பரவியுள்ளது. உலகளவில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்கான மாநாட்டில், வளரும் நாடுகள் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து விவாதித்துள்ளனர்.
உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார சேதத்தை, இவர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் தேவை என இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளில் 2 முதல் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும். இந்த இழப்பு, வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும், அதே சமயம் இந்தியா மற்றும் சீனா இந்த பொருளாதார சுனாமியிலிருந்து தப்பிக்கும் என ஐ.நா வர்த்த மேம்பாட்டு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்தியாவும், சீனாவும் இதிலிருந்து தப்பிக்கும் என்பது குறித்த விரிவான தகவலை வெளியிடவில்லை.
சீனாவுக்கு அப்பால் வைரஸ் பரவத் தொடங்கிய இரண்டு மாதங்களில், முதலீடுகள் வெளியேற்றம், பண மதிப்புக் குறைவு, ஏற்றுமதி வருவாய் இழப்பு, பொருட்களின் விலைகள் வீழ்ச்சி மற்றும் சுற்றுலா வருவாய் குறைந்தது உள்ளிட்டவை வளரும் நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த நெருக்கடிகளை கையாள போதிய நிதி மற்றும் நிர்வாக திறன் இல்லாததது, கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை என அனைத்தும் இணைந்து வளரும் நாடுகளுக்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இந்நெருக்கடியான சூழலில், வளர்ந்த நாடுகளே முறைசாரா தொழிலாளர்களின் பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. வளரும் நாடுகளுக்கு இது கூடுதல் சிக்கல் என கூறப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் நிறுவனங்கள் மற்றும் மக்களின் வருமான இழப்பை தடுக்க எதை வேண்டுமானாலும் செய்வதாக உறுதியளித்துள்ளன. ஜி20 நாடுகள், தங்கள் நாடுகளுக்கு வெளியே வாழும் 600 கோடி மக்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா வர்த்தக மேம்பாட்டின் இயக்குனர் ரிச்சர்ட் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply