புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
உலக நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்படுத்தி, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா என்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா எதிர்ப்பு மருந்து, ஹெச்ஐவி நோயாளிகளுக்கு தரப்படும் மருந்துகள் ஆகியவற்றையே கரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பல்வேறு நாடுகள் நிலைமையை சமாளித்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் 6 நிறுவனங்கள், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து ஃபரீதாபாதில் உள்ள சுகாதார அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ககன்தீப் கங், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஜைடஸ் கடிலா மருந்து தயாரிப்பு நிறுவனம் 2 தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இதேபோல், சீரம் இன்ஸ்டிடியூட், பயலாஜிகல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்மியூனலாஜிகல்ஸ், மின்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு தடுப்பு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றானது, இதுவரை நாம் அறிந்த நோய்த்தொற்றுகளைப் போல் அல்லாமல், அதிவிரைவாக, அதிக எண்ணிக்கையிலான நபர்களிடம் பரவுகிறது. எனவே, இந்த நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது சவாலான பணியாக உள்ளது.
நோய்த் தடுப்பு மருந்துகள் பல சவால்களைக் கடந்து, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படுகின்றன. முதலில் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தப்படும். பின்னர் விலங்குகளிடம் கொடுத்து பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியான கண்காணிப்புக்குப் பிறகு மனிதர்களிடம் கொடுத்து உறுதிசெய்யப்படும். அதைத் தொடர்ந்து, மக்களுக்கு கிடைக்கும் வகையில் அளிக்கப்படும். இதற்கு சில ஆண்டுகள் வரை ஆகலாம். ஆகவே, இந்த ஆண்டிலேயே தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.
Leave a Reply