வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில், 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்ற சூழலில், பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. இதனால், திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க மக்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் தற்காத்துக் கொள்ள, துப்பாக்கி வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதம் தான். ஆனாலும், அங்கு பெரும்பாலானோர் தங்களின் பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் மட்டும், 20 லட்சம் துப்பாக்கிகளை அமெரிக்க மக்கள் வாங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும்; 2013ல் நியூ டவுனில் உள்ள சாண்டி ஹூக் என்ற பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்த போதும் அமெரிக்க மக்கள் துப்பாக்கி வாங்குவது உச்சத்தைத் தொட்டது. அதன் பின், தற்போது துப்பாக்கி விற்பனை உச்சத்தை அடைந்துள்ளது.
அரசின் நிலை மோசமடைந்ததால்…
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் திமோலி லிட்டர் கூறுகையில், ‘அமெரிக்காவில் ஏராளமானோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். இதனால், தொழில் நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால், சிவில் கோளாறு ஏற்படக்கூடும் என, மக்கள் பதற்றமடைந்துள்ளனர். அரசின் நிலை மோசமாகத் துவங்கினால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்களுக்கு கவலை ஏற்படும். அதன் விளைவாகவே துப்பாக்கிகளை வாங்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன் எப்போதும் இல்லாத வகையில், திருட்டு பயத்தினால் துப்பாக்கி விற்பனை சூடுபிடித்துள்ளது, அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை. ‘இது, அமெரிக்காவில் நிச்சயமாக அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என, அச்சம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், ‘அங்கு துப்பாக்கி விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டியது அவசர அவசியம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply