இங்கிலாந்து மற்றும் பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் தலா ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
லண்டன்:
உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 96 ஆயிரத்து 286 பேருக்கு பரவியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 833 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 960 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 596 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. இத்தாலியில் நிலைகொண்டிருந்த வைரஸ் தற்போது அண்டை நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்சில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 869 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 987 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் (கோப்பு படம்)
இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 73 ஆயிரத்து 758 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரசுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 980 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது.
Leave a Reply