ஐகோர்ட்டு, மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறது. தமிழகத்தில் ஐகோர்ட்டு உள்பட அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமான அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் மூத்த நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்டு நிர்வாகக் குழுவின் கூட்டம் நடந்தது. அப்போது, நீதிமன்றங்களுக்கு மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை ரத்து செய்வது, ஊரடங்கின்போது, நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் நேற்று மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் ஐகோர்ட்டு முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது. இதே முறையை வருகிற மே 3-ந்தேதி வரை தொடர்வது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வருகிற மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கோடை விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடுமுறையை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply