ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை,
கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம். வாகன உரிமையாளர்களிடம் தினசரி காலை 7 மணி முதல், பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் பகல் 1 மணிவரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.
வாகனங்களை திரும்ப பெறும்போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.
எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி, வாகன உரிமையாளர்களுக்கு, எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாக அனுப்பப்படும். தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.நகல், வாகன உரிமையாளர்களின் ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றை வாகன உரிமையாளர்கள், வாகனங்களை திரும்ப பெறும் போது காட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலானது முதல் நேற்று பகல் வரை, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கைது எண்ணிக்கையும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 ஆக உயர்ந்தது. ரூ.89 லட்சத்து 23 ஆயிரத்து 644 அபராத தொகை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைப்பது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எப்போது முதல் திருப்பி ஒப்படைப்பது? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்’ என்று கூறினார்.
Leave a Reply