ஊரடங்கு உத்தரவை 3-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது சோதனையான காலத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கூறி இருக்கிறது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்தி விரட்டியடிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதனால்தான் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். அனைத்து தொழில், வணிக நடவடிக்கைகள், போக்குவரத்து, உற்பத்தி என எதுவுமே நடைபெறவில்லை.
நேற்று இந்த ஊரடங்கு முடிவடைய இருந்த தருணத்தில் வரும் 3-ந் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்திருப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்திரபால் சிங் கூறியதாவது:-
மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க இது வசதியாக அமையும். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கும், அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற தடத்தை கண்டறிவதற்கும், சுகாதார நடவடிக்கைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 வார கால அளவுக்கு இந்த ஊரடங்கு செல்கிறது.
மிகப்பெரிய, கடினமான சவால்களுக்கு மத்தியில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் இந்தியா நிலை குலையாத உறுதியை வெளிப்படுத்தி உள்ளது.
ஒரு சோதனையான காலத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களை சார்ந்திருக்கிறது. சுகாதார பணியாளர்களை சார்ந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை செய்து இந்த வைரசை வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply