ஊரடங்கு நாட்களில் ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக புதிய விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. சில நிபந்தனைகளுடன் கட்டுமான பணிகள் நடைபெறலாம் என்றும், தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும் அறிவித்தது.
ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மேலும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது. அதாவது ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து, ஊரக பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த விதிவிலக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் ஊரக பகுதிகளில் குடிநீர் சப்ளை, சுகாதாரம், மின்சாரம் கொண்டு செல்வது தொடர்பான பணிகள், தொலைத்தொடர்பு சேவைக்கான வடங்களை பதிப்பது போன்ற பணிகளை செய்யலாம் என்றும், குறைந்த அளவு ஊழியர்களுடன் வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் ஆகிய வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பழங்குடியின மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மூங்கில், தேங்காய், பாக்கு, வாசனை பொருட்கள் பயிர் செய்வது, அறுவடை, பதப்படுத்துதல், விற்பனை செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Leave a Reply