ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவ முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயர மளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும்.
நோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன் அதை தனியார் மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்திட வழிவகை செய்திட வேண்டும்.
நோய்த் தாக்கம் அதிகமாகிவிடக் கூடாது என்று பெரிதும் விழைந்திடும் அதே நேரத்தில், ஒருவேளை அரசின் முயற்சிகளையெல்லாம் தாண்டி, தாக்கம் அதிகமாகிவிட்டால், அதனை எதிர்கொள்ள அவசர நிலை ஏற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் இருந்தாக வேண்டும்.
அதிகமான நோயாளிகளை எதிர்கொள்ளும் பொருட்டு படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துதல், செயற்கை சுவாசக்கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உற்பத்தி அல்லது கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்.
முறையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் அளிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளிலுள்ள கொரோனா நோய் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே கொரோனா பாதுகாப்புத்தனிநபர் கவசங்கள், உபகரணங்கள் உள்ளதென்றும், அதுவும் உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின்படி, மருத்துவப் பணியாளர்களைத் தொற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்குமளவுக்குப் போதுமான வரையறைகளின்படி அமைந்திடவில்லை என்றும் அறியப்படுகிறது. இதில் கவனம் செலுத்துங்கள். தாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப்பணியாளர்களுக்கும், கொரோனா களப்பணி யாளர்களுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, போன்றவற்றில் ஒளிவு மறைவு சிறிதுமின்றி வெளிப்படைத்தன்மை வேண்டும்.
தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.
அதே நேரத்தில், ஊரடங்கினால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வீடில்லாதோர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் அனை வருக்குமான வாழ்வாதாரத்தை உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை உறுதி செய்திட வேண்டும்.
பாதிப்புக்குட்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையே ஆகும். சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இதுவரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5000 ரொக்கம், மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அவற்றுடன் கொரோனா நோய்த் தொற்று பரவாத வகையில் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்கிட வேண்டும். வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகளை, அத்தியாவசியப் பணிகளாக அறிவிப்பது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை மாநில அரசும் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அம்முடிவை தவிர்க்க வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காகத்தான் அந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள். இது சட்டமன்ற உறுப்பினர்களின் தார்மீக உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல.
மக்கள் நலனுக்காய்ப் போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் வேண்டும். உயர்நீதிமன்றம் அவற்றைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியும் இன்னும் நடைபெறவில்லை.
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட களப்பணியிலிருக்கும் எல்லாத்துறைகளையும் சேர்ந்த அனைத்துப்பேரிடர் காலக் களப்பணியாளர்களுக்கும், உரிய அளவில் ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்.
தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களையும் அரசு ஊழியர்கள் போல இப்பேரிடர் காலத்தில் கருதி உதவிகள் செய்தாக வேண்டும்.
‘தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்’ மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply