ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.
ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது – மத்திய அரசு அதிகாரி தகவல்
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிர் இழப்பும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர். 20 சதவீதம் பேர்தான் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 நாட்களில் இரு மடங்கு ஆனது. ஊரடங்கை அமல்படுத்திய பிறகு சமீபத்தில் 6.2 நாட்களில் தான் இரு மடங்கு
ஆகி இருக்கிறது. அதாவது ஊரடங்கை அமல்படுத்திய பிறகு கொரோனா பரவும் வேகம் குறைந்து இருக்கிறது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது.
ஊரடங்கு உத்தரவு காட்சி
நாடு முழுவதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,919 ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், மேலும் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 21 ஆயிரத்து 800 படுக்கைகளும் உள்ளன.
கொரோனா பரிசோதனைக்காக 5 லட்சம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து வந்து உள்ளன. அந்த கருவிகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கொண்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு, மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ பரிசோதனைக்கான உபகரணங்கள் போன்றவை குறித்து மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தியது.
கொரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் பல்வேறு வகையான முயற்சிகளில், நம்முடைய பாரம்பரிய முறைப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்றை விரைவாக கண்டறிவதற்கான கருவியை உருவாக்குவதிலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. நமது பரிசோதனை திறனை மேம்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து அந்த கருவியை உருவாக்க முயன்று வருகின்றன.
இந்த கருவி தயாராகிவிட்டால், இதன் மூலம் கொரோனா தொற்று பரிசோதனையை துல்லியமாகவும், 30 நிமிடங்களிலும் செய்து முடிக்க முடியும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வெளிநாடுகளுடன் இணைந்து நாம் செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தொற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் ராமன் கங்காகேத்கர் கூறுகையில், இந்தியாவில் இதுவரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Leave a Reply