மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களுக்காக உடனடியாக ரூ. 1000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
*அதிகளவிலான பிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை உபகரணங்களை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்
பிபிஇ, என்-95 முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதுமான எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும். இதற்காக முன்னதாக ரூ. 3,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தேன். அதை விடுவிக்க வேண்டும்.
மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ. 510 கோடியை விடுவித்தமைக்கு பிரதமருக்கு நன்றி. 15வது நிதிக் குழுவின் வரைமுறைப்படி, மாநில பேரிட நிதியில் தமிழகத்துக்கு 64.65 சதவீதமே உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே, மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதமாகும்.
2016-இல் வர்தா, 2017-இல் ஒக்கி புயலுக்குப் பின் கடுமையான வறட்சி, 2018-இல் கஜா என தமிழகம் தொடர்ந்து இயற்கை பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. இருப்பினும், மாநில பேரிடர் நிதியில் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1,000 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
ரயில் மற்றும் விமான சேவை தொடங்கப்படக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது என பிரதமரையும், மற்ற முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஊரடங்கு காரணமாக, வேளாண் துறைக்கு நாம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். அத்துடன், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட வேண்டும். அவர்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ. 2,000 வழங்க வேண்டும்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள விரைவு பரிசோதனை உபகரணங்கள் தேவை. 2 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தற்போது 12 அரசு மற்றும் 5 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இவை மாவட்டத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் உயர்த்தப்பட வேண்டும்.
Leave a Reply