ஈராக்கின் புஸ்ரா மாகாணம் புர்ஜெசியா நகரில் இயங்கி வரும் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக்கில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளையும், அமெரிக்க தூதரகத்தையும் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் ராணுவதளத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்களும், இங்கிலாந்து வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்ப், ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த நாடு பேரழிவை சந்திக்கும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஈராக்கின் புஸ்ரா மாகாணம் புர்ஜெசியா நகரில் இயங்கி வரும் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து 3 ராக்கெட் குண்டுகள் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்துக்கு அருகே விழுந்து வெடித்தன. எனினும் இந்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனத்துக்கோ, அதன் ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Leave a Reply