இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவாகவும், பணி நிமித்தமாகவும் ஏராளமானோர் வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேபோல் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியவில்லை.
விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் இந்தியாவில் தங்கி இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்படி தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாதவர்களின் விசா அனுமதியை முதலில் கடந்த 15-ந் தேதி வரையும், பின்னர் இரண்டாவது முறையாக வருகிற 30-ந் தேதி வரையும் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் இந்தியாவில் ஊரடங்கு வருகிற மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் சிக்கி தவிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் விசா காலம் ஏற்கனவே முடிவடைந்து இருந்தாலோ அல்லது பிப்ரவரி 1-ந் தேதிக்கு பிறகு முடிவடைவதாக இருந்தாலோ, அது அபராதம் அல்லது கட்டணம் எதுவும் இன்றி மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அவர்கள் பிராந்திய வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தங்கள் விசா மற்றும் இ-விசா காலத்தை மே 3-ந் தேதி வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
இதேபோல் தூதரக அதிகாரிகள், ஐ.நா. அதிகாரிகள் நீங்கலாக பிற வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதும் 3-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வரும் பகுதிகளில் உள்ள 107 சுங்க சோதனைச்சாவடிகளும் மே 3-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Leave a Reply