இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நாட்டில் 420 பேரின் உயிரை இந்த வைரஸ் காவு வாங்கி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தனது வேலையை காட்டி கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் இணைந்துள்ளன. அங்கும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் புதிதாக 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் 10,824 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,515 பேர் வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி 420 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு புதிதாக 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாராவி குடிசை பகுதியில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 80-ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 500-க்கும் அதிகமானோரும், கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா 300-க்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply