இந்தியாவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி இருந்த நிலையில் 24 மணி நேரத்துக்குள் மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 2,014 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலே அவசியம் என கருதப்படுகிறது.
அதனால்தான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனா பாதிப்பு எப்போது குறையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் என்னவோ கொரோனா தனது கோரப்பார்வையால் எல்லா நாடுகளையும் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தாலும், மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தால், வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமே. அந்த வகையில்தான் மெல்ல மெல்ல இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், இப்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,792 ஆனதாகவும், இந்த வைரஸ் தொற்றால் 488 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பலியாவோர் எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 957 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,014 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இறப்பு விகிதம் சுமார் 3.3 சதவீதமாக உள்ளது. 0-45 வயதுக்கு உட்பட்டவர்களில் 14.4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 45-60 வயதுக்கு உட்பட்டோர் இறப்பு 10.3 சதவீதம் ஆகும். 60-75 வயதுக்கு இடையில் இது 33.1 சதவீதமாகவும், 75 வயதுக்கு மேல் 42.2 சதவீதமாகவும் உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,992 பேர் மீண்டுள்ளனர். குணம் அடைந்தோர் சதவிகிதம் 13.85 ஆக உள்ளது. டெல்லி நிஜாமுதின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் தொடர்புடையவர்களில் 4,291 பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது. அதன்படி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று நாட்டின் மொத்த எண்ணிகையில் 29.8 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply