உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது.
நியூயார்க்:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் 17 ஆயிரத்து 62 ஆயிரத்து 703 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 715 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களாக கோரத்தாண்டவம் ஆடி வந்தது. அந்நாடு கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கிக்கொண்டுள்ளது. அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியிலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவரை கொண்டு செல்லும் காட்சி
தற்போதைய நிலவரப்படி, இத்தாலியில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 271 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 ஆயிரத்து 468 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 5 லட்சத்து 22 ஆயிரத்து 320 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 86 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Leave a Reply