இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என்று பரவிய வதந்தியால், அங்கு சுமார் 20 செல்போன் கோபுரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
லண்டன்,
இங்கிலாந்தில் 51 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி நெட்வோர்க் சேவையை தொடங்கி உள்ளன. அதே சமயத்தில், 5ஜி நெட்வொர்க், கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிப்பதாக இங்கிலாந்தில் வதந்தி கிளம்பியது.
இதையடுத்து, செல்போன் கோபுரங்களை பொதுமக்கள் தேடித்தேடி அழித்து வருகிறார்கள். குறிப்பாக, லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் சுமார் 20 செல்போன் கோபுரங்கள் தீவைத்தும், சூறையாடியும் அழிக்கப்பட்டுள்ளன.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், 5ஜி நெட்வொர்க் மெதுவாக அமலாகி வருவதால், எரிக்கப்பட்ட பெரும்பாலான கோபுரங்களில் அந்த தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. எனவே, 3ஜி, 4ஜி நெட்வொர்க் கோபுரங்களே எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், தொலைத்தொடர்பு நிறுவன என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்து தாக்கி வருகிறார்கள். இதுபோன்ற 30 சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. அதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதனால், ஓ2 என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தங்கள் ஊழியர்கள் செல்லும் வேன்களில், “முக்கிய பணி; தாக்குதல் நடத்தாதீர்கள்” என்ற அடையாள அட்டையை பொருத்தி உள்ளது.
4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடங்கிய ‘மொபைல்யுகே’ என்ற குழுமம், இத்தகைய தாக்குதல்களை தடுக்க பொதுமக்களின் உதவியை நாடி உள்ளது.
தாக்குதல் நடப்பதை கண்டால், தகவல் தெரிவிக்குமாறும், கொரோனாவுடன் 5ஜி நெட்வொர்க்கை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
Leave a Reply