குஜராத் முதல்-மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
காந்திநகர்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் குஜராத்தில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தில் நடந்தது.
முதல்-மந்திரி தலைமையில் நேற்றுமுன்தினம் காலையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில துணை முதல்-மந்திரி, சுகாதார துறை மந்திரி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பங் கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கேடவாலா என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அன்று மாலை உறுதியானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி விஜய் ரூபானி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி ஆனது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 7 நாட்களுக்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு வாரத்துக்கு முதல்-மந்திரி விஜய் ரூபானியை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும், காணொலி காட்சி மற்றும் தொலைபேசி அழைப்பு போன்ற தொழில்நுட்ப வசதி மூலம் மாநில நிர்வாகத்தை அவர் நடத்துவார் என்றும் முதல்-மந்திரி அலுவலக செயலாளர் அஸ்வானி குமார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply