அமேசான் மழைக்காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்று அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தான்.
பிரேசிலியா:
பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
ஆனால் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா இவர்களையும் விட்டுவைக்கவில்லை. அமேசான் மழைக்காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்று அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த சிறுவன் ரோரைமா மாகாணத்தின் தலைநகர் போவா விஸ்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
சிறுவனின் மூலம் யனோமாமி பழங்குடியினத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே அந்த இன மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Leave a Reply