அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதனால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் குறையத் தொடங்கி உள்ளது. 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரம் பேர் அளவுக்கு உயிரிழந்து வந்தனர். ஆனால், இப்போது தாக்கமும் சரி, உயிரிழப்பும் சரி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1334 பேர் இறந்துள்ளனர்.

இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 700-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இதேபோன்று தினமும் 30 ஆயிரம் பேர் அளவுக்கு புதிதாக இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது அது கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 895 ஆக உள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனைகளை செய்து கொண்டுள்ளனர்.

இது அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 4 நாடுகளில் சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமானது.

ஸ்பெயினில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 99 பேரும், இத்தாலியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 516 பேரும், பிரான்சில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 779 பேரும், ஜெர்மனியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 772 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மையமாக திகழ்ந்து வந்த நியூயார்க்கில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 17 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 459 ஆகவும் உள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் இறப்பும், தாக்கமும் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க் நகரில் புதிதாக 6,765 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு ஆளாகி உள்ளனர். இங்கு தினந்தோறும் 10 ஆயிரம் பேர் பாதித்து வந்தது நினைவு கூரத்தக்கது. பலியும் தினமும் 1,000 பேர் என்று இருந்த நிலை மாறி கடந்த 24 மணி நேரத்தில் 722 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ இதுபற்றி நிருபர்களிடம் பேசுகையில், “மோசமான நிலை என்பது முடிவுக்கு வந்து விட்டதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது இயல்பு நிலைக்கான பாதைக்கு திரும்பலாம். மீண்டும் வணிகங்கள் தொடங்குவதை பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக தடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவை சேர்ந்த டாக்டர் டெபோரா பிரிக்ஸ் குறிப்பிட்டார்.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோணி பாசி கூறுகையில், “நியூயார்க் போன்று கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த இடங்களில் இப்போது நோய்த்தீவிரம் அதிகரிக்கவில்லை” என்று கூறினார்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவுவது வார இறுதியில் குறைந்துள்ளது. இது கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் பலன் அளிக்கின்றன என்பதற்கு சான்றாக அமைகிறது. அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றி வருகிறார்கள். நம்ப முடியாத அளவுக்கு இது அமைந்துள்ளது. கட்டுப்பாடுகள் தகுந்த பலனை அளித்து வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நியூயார்க், நியூஜெர்சி, மிச்சிகன், லூசியானா ஆகிய மாகாணங்களில் இந்த வைரஸ் தாக்கி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவது குறைந்து இருக்கிறது.

நான் தொடர்ந்து எனது குழுவினருடனும், வல்லுனர் களுடனும் கலந்துரையாடி வருகிறேன். நமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்துடன் இருக்கிறோம். இது மிகவும் முக்கியமானது.

எனது நிர்வாகம் விரைவில் புதிய மற்றும் மிக முக்கியமான வழிமுறைகளை இறுதி செய்யும்.

எனது நிர்வாகத்தின் திட்டங்களும், வழிகாட்டுதல்களும் அமெரிக்க மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். அதுதான் நமக்கு வேண்டும். நமது நாடு திறந்திருக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். நமது நாடு வெற்றிகரமாக திறக்கப்படப்போகிறது. விரைவில் இது பற்றி நாங்கள் விளக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்வது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “அதற்கான அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ளது. அது முழுமையான அதிகாரம் ஆகும். இது கவர்னர்களுக்கும் தெரியும்” என டிரம்ப் குறிப்பிட்டார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பல்துறை நிபுணர்களைக் கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு 2-வது பணிக்குழுவை அமைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் குழு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்கான பரிந்துரைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கு 2.2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.165 லட்சம் கோடி) செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

வரும் 1-ந் தேதி அமெரிக்காவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதற்கிடையே அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் உள்ள 10 மாகாணங்கள் ஊரடங்கை விலக்கி கொள்வது பற்றி திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *