Spread the love

தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொலைகார கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளையெல்லாம் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகமெங்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் (பேட் கோவிட்) காணப்படுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது பற்றிய தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ் கூறியதாவது:-

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் இருப்பது தெரிய வந்தது. எங்கள் ஆய்வை உறுதி செய்வதற்கு, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தினோம். அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் இல்லை.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் காணப்படுகிற “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அதாவது, “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு காரணமான சார்ஸ்-கோவ் 2 வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் ஆய்வில் 2 வகையான வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரசை காண முடிந்தது; தொற்று நோயுடன் வருகிற வைரஸ்களை அடையாளம் கண்டறிவதற்கு தொடர்ச்சியான, தீவிரமான கண்காணிப்பு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

“இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகைகளில் கொரோனா வைரசை கண்டறிதல்” என்ற தலைப்பிட்ட அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இயற்கையாகவே வவ்வால்கள் பலவகை வைரஸ்களின் இருப்பிடமாக திகழ்கின்றன. அவற்றில் சில மனித நோய்க் கிருமிகள் ஆகும். இந்தியாவில் கடந்த காலத்தில் பிடெரோபஸ் வவ்வால்களில் நிபா வைரசுக்கு தொடர்பு இருப்பது கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளிவந்துள்ள கடுமையான சுவாச நோயை ஏற்படுத்துகிற சார்ஸ் வைரசுக்கும் (கோவ்-2), வவ்வால்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது மாறி வரும் மக்கள் சூழல், சுற்றுச்சூழல்களில் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களில் வவ்வால்களின் தாக்கம் எப்படி அமைகிறது என்பது பற்றி ஆராய்வது சவாலானது.

வவ்வால்களிடம் இருந்து வைரஸ் தொற்றுகள் வெடிக்காமல் இருப்பதற்கும், உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பதற்கும் இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளும், கண்காணிப்பும் முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page