ஷிம்லா: கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் அவர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஹிமாச்சல் மாநில டிஜிபி எச்சரித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் அவர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஹிமாச்சல் மாநில டிஜிபி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹிமாச்சல் மாநில டிஜிபி மார்டி திங்களன்று விடியோ வாயிலாக பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹிமாச்சல் மாநிலத்தில் கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பி, அதன்மூலம் மற்றவருக்கு நோய்த்தொற்று உண்டானால் எச்சில் துப்பிய நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும். அதுபோன்ற ஒரு சம்பவம் இங்குள்ள மருத்துவமனையில் நடந்துள்ளது.
சமீபத்தில் வெளி நாடு மற்றும் வெளியூர் சென்றவர்கள் தங்களது பயண விபரத்தை தெரிவிக்க வேண்டுமென்று போலீசார் விடுத்த எச்சரிக்கைக்குப் பின்னர் இதுவரை 52 பேர் முன்வந்து விபரங்களை அளித்துள்ளனர். தில்லி மாநாடு உட்பட தங்களது பயண விபங்களை மறைப்பவர்கள் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி தற்போது அம்மாநிலத்தில் ஏழு பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
Leave a Reply